தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும்: ஜனா

அடுத்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்படும் 37 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்கும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழாவில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தின் 5 வருட ஆட்சிக்காலம் முடிவுறும் நிலையில் இருக்கின்றது. இந்த ஆட்சிக்காலம் சிலவேளைகளில் மேலும் நீடிக்கப்படவுள்ளதாகவும் கருத்துக்கள் வருகின்றன.

மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இலங்கையிலே உள்ள 9 மாகாண சபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடத்தக்கூடிய சூழலை மத்திய அரசாங்கம் உருவாக்கி வருவதாக நாம் அறிகின்றோம்.

ஆனால் இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமாக இருந்தால் 2019 ஆண்டு செப்டம்பர் மாதம்தான் அந்தக் காலக்கெடு வரும்” என கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

LEAVE A REPLY