தமிழ்க் கூட்டமைப்புக்கும் தேர்தல் தோல்வி பயம்

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவே வடமாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலங்கடத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதற்குக் காரணம் என கூ ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும குற்றஞ்சாட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு மாகாண தேர்தல்கள் நடைபெறாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரி என்றும் இனவாதி என்றும் விமர்சித்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், தோற்பது தெரிந்தும் மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண தேர்தலை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சு மீதான குழு நிலைவிவாதத்தில் உரையாற்றிய அவர் ​மேலும் குறிப்பிட்டதாவது, மாகாண சபைத் திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களை அரசு செய்து கொண்டது.இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.இது அவருக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. ஆளுநரின் கீழ் இருந்தால் போதும் என்ற நிலை எதிர்காலத்தில் வரலாம். எல்லை நிர்ணய குழு தொடர்பான குழு இரண்டு நாட்கள் மட்டுமே கூடியது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. முத்திரைக்கட்டணம் நேரடியாக உள்ளூராட்சி சபைகளுக்கு கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு கோரி வருகிறோம்.

மாகாண சபைத்தேர்தலை நடத்த பல்வேறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழிகள் உள்ளன.தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடிவுகள் எடுக்க முடியாமல் செயலிழந்துள்ளது.

வடமாகாண சபைத்தேர்தல் நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முடிவு செய்தபோது அது தொடர்பில் வேறு பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தினால் த.தே.கூ தான் வெல்லும் அதனால் தேர்தலை நடத்த வேண்டாம் என கோரப்பட்டது.

ஆனால் ஒரு வருடம் கடந்து தேர்தல் நடத்தினாலும் வெல்ல முடியுமா. தமிழ்பேசும் மக்களுக்கு தமது உரிமையை வழங்க வேண்டும் என்று கூறி அவர் தேர்தலை நடத்தினார்.ஜ.ம.சு.மு இதில் தோற்றாலும் ஜனநாயகம் வென்றது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் த.தே.கூ பின் தலையீடு பூச்சியமாகவே உள்ளது.

இனியாவது காத்திரமாக தலையீடு செய்ய வேண்டும்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் பொலிஸ் உத்தியோகஸ்தின் இடமாற்றம் குறித்து கூட கூறப்பட்டுள்ளது.பல வருடங்களாக மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படாது குறித்து இதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.