தமிழை யார் பேசினாலுமே சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்: கருணாகரம்

தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை மாத்திரமல்ல தமிழை யார் பேசினாலும் அவர்களை சந்தேக கண்ணோட்டத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் நிலைமை மீண்டும் உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுதாவளை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது கோவிந்தன் கருணாகரம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த காத்தான்குடியில் பயங்கரவாதம் உருவெடுத்தமையினாலேயே பெரும்பான்மையினர் தமிழ் பேசும் அனைவரையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது.

மேலும் இந்த பயங்கரவாதம் உடனடியாக தோற்றம் பெற்றிருக்காது. 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

அந்தவகையில் காத்தான்குடியில் 28 வருடங்கள் அரசியல் அதிகாரத்திலிருந்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு இவ்விடயம் குறித்து எந்ததொரு தகவலும் தெரியாதென்பது வேடிக்கையாக உள்ளது.

அதாவது ஊரில் நிகழும் சம்பவங்கள் ஏதும் அறியாமல் அரசியலில் ஈடுபட்டிருப்பார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் பொய் உரைக்கின்றார்.

இதேவேளை முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 2 ஆளுநர்களும், ஒரு அமைச்சரும் மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். ஆகையால் இவர்கள் மூவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குறித்த மூவரின் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர். அதனையே நாமும் விரும்புகின்றோம்” என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.