தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புதிய குற்றச்சாட்டு முன்வைத்த மஹிந்த அணி!

ஸ்ரீலங்காவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீலங்கா அரசாங்கம் சிலவற்றை மக்களுக்கு கூறாமல் மறைத்து விடுவதாகவும் கூறியுள்ளது.

மலேஷியாவில் இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியதைப் போன்றே ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் அப்படியான சந்தர்ப்பமொன்று கிடைக்கும் என்று பேராசியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

ஒன்றிணைந்த எதிரணியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு பொறளையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,

”ஜனாதிபதி செயலகப் பிரதானி கலாநிதி மஹனாம மற்றும் மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகராஜ் என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் உரிமையாளரது முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். நாகராஜ் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பினார். இது இன்று நேற்று இடம்பெற்ற பிரச்சினையல்ல. 2017ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து இவர்கள் லஞ்சம் கோரியதாகவும், பணம் பெறும்வரை திட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்போவதில்லை என்றும் தினமும் இடையூறு ஏற்படுத்தினர்.

நாகராஜ் என்பவர் இப்போதாவது லஞ்சமற்ற இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் கூறியுள்ளார். நாகராஜின் அலுவலகத்திற்கு நபரொருவர் சென்றுள்ளார். குறித்த நபர் கடிதமொன்றை எழுதியிருப்பதோடு அதில் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவராக அடையாளப்படுத்தியிருக்கின்றார். நாகராஜ் என்பவரை கொலை செய்வதற்கான தெளிவான உத்தரவு விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைத்திருப்பதாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். எனவே நாகராஜ் என்பவருக்கு வேறு வழியில்லை. இலஞ்சம் வழங்காவிட்டால் அவரது உயிருக்கே ஆபத்து. இவை அனைத்தும் ஊடகங்களில் வெளியானவை. நாகராஜ் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொலிஸில் முறையிட்டதோடு தேவையான பாதுகாப்பை வழங்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இதுதான் நல்லாட்சியின் மற்றொரு முகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் ஸ்ரீலங்காவிற்குள் வருவார்களா? இது வெற்று அச்சுறுத்தல் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். கடந்த மாதத்தில் மட்டும் ஸ்ரீலங்காவில் 37 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன”

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பீரிஸ்,

”எமக்குத் தெரியாது. இது அரச புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான செயற்பாடாகும். எமது அரசாங்கம் இருக்குமானால் இந்தப் பிரச்சினைக்கு நேரடி பதிலை வழங்கியிருப்போம். இந்த அரசாங்கம் என்ன செய்கிறது? மக்களிடம் இருந்து ஏன் சிலவற்றை மறைக்கிறது உண்மை நிலை என்ன என்பது எமக்குத் தெரியாது. அது அரசாங்கத்திற்கு உரியதாகும்” என்றார்.

LEAVE A REPLY