தமிழர் நலனுக்காக அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழரசு கட்சி

தமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கியில், “நாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் எப்போதும் ஒற்றுமையுடன் அடிப்படை தேவைகளை வென்றெடுக்க போராடி வருகின்றோம்.தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தமிழ் தரப்புக்கள் ஒருமித்து மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க ஓர் கொள்கையை வகுக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகின்றன. இதனை நாம் எப்போதிலிருந்தோ வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போது கூட தமிழ் மக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற தமிழ் தரப்புக்கள் அனைவரும் ஒன்னினைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.

தமிழ் தரப்புக்கள் அனைத்தும் உங்கள் கொள்கைகள் உங்கள் கருத்துகளில் விலகாது தமிழ் மக்கள் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து மக்களுக்கு தேவையாக உள்ள அடிப்படை விடயங்களை நிறைவேற்ற ஒன்றினைவோம் அதற்கு எனது கட்சி தயாராகவே உள்ளது” என கூறினார்.