தமிழர் எதிர்ப்பார்க்கும் அரசியலமைப்பை பெற நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: டிலான்

தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் அரசியலமைப்பினை தயாரிக்க நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு தொடர்பில் சுமந்திரன் நாட்டை சீரழிக்கும் கருத்தினை தெரிவித்து வருகிறார்.

புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் நிர்ணயசபையில் நானும் இருக்கிறேன். பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்பு வரைபு சமர்ப்பிக்கப்படும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் வரைபினை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் இருக்கலாம். இதனாலேயே கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக கையைத் தூக்குகின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு முறையிலும் புதிய அரசியல்யாப்பிற்கான வரைவு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது. சுமந்திரன் இவ்வாறு கூறுவதன் மூலம், தமிழர்களை ஏமாற்றுவதுடன் மாத்திரம் இல்லாமல், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பாரிய பிளவினையும் ஏற்படுத்துகிறார்.

தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் அரசியலமைப்பினைத் தயாரிக்க நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், அவர் அது கிடைக்கும் என பொய் கூறுகிறார்.

சுமந்திரன் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு அமைய செயற்படவில்லை. தடம்மாறி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக செயற்படுகிறார். சுமந்திரனின் கருத்துக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கருத்துக்களை விடவும் ஆபத்தானது. பிரபாகரன் அன்று சிங்கள பிரிவினைவாத கருத்துக்களையே தெரிவித்துவந்தார்.

ஆனால் இன்று சுமந்திரனின் சிங்கள மற்றும் தமிழ் பிரிவினைவாதக் கருத்துக்களை கூறுகிறார். சிங்கள தமிழ் மக்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இவ்வாறான கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை” எனத் தெரிவித்தார்.