தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள்- ஆனந்தசங்கரி

தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவமென சொல்லிக்கொண்டு தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள். இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்களென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ, அதை செய்வோம். இதை செய்வோம் என பொய் சொல்லி வாக்கு கேட்பவர்கள் இல்லை.

மேலும், நாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டார்கள்

ஆனால் தற்போது உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. எங்களுடைய இலட்சியம் எங்கள் தலைவர்களின் இலட்சிய பாதையில் பயணிப்பதே ஆகும்.

ஏக பிரதிநிதித்துவம் என்றால் எல்லோரும் ஒன்றாக நிற்பது. ஆனால் தற்போது யார் ஒன்றாக நிற்கிறார்? பலவாறு பிரிந்து நிற்கிறார். பல கட்சிகள் ஏன் தோற்றம் பெற்றது என தெரியவில்லை.

வட.மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை எமது கட்சியில் இணைய வருமாறு அழைத்தபோது அவர் வரவில்லை. இன்று தேவையற்ற பலரை இணைத்து அவரும் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணி என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்ததோ என்ன கொள்கையை கொண்டு பயணித்ததோ அதே நோக்கம், கொள்கையுடனும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.

எமது கொள்கையுடன் இணைந்து பயணிப்போர் எம்முடன் இணைந்து பயணியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.