தமிழர்கள் பாதிக்கப்படுவதை தமிழ்த்தலைமைகள் உணர வேண்டும்: வியாழேந்திரன்!

நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்படுவதை தமிழ்த்தலைமைகள் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த்தலைமைகள் தமிழர்களின் எதிர்காலம் நல்லிணக்கம் என்ற போர்வையில் குழிதோண்டிப் புதைக்கப்படுவதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதிலும் முக்கியமாக கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு பிரதான ஆதரவினை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் எமது பிரதேசங்களின் அபிவிருத்திகளை இலகுவாக முன்கொண்டு செல்ல முடியும்.

ஆனால் சிங்களத் தலைமைகள் தம்மை ஏமாற்றுவதை அறிந்து கொண்டிருந்தும், தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் ஏமாந்து கொண்டிருக்கின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.