தமிழர்கள் சுயமரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும்

புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஏனைய இனங்கள் அனுபவிக்கும் சகலவிதமான அரசியல் உரித்துக்களையும் பெற்று தமிழர்கள் சுயமரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் மூலம் அந்த நிலைமையை உருவாக்குவோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

யாழ். குருநகரில் மீன்பிடி துறைமுகத்திற்கான அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இனப் பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக தமிழ் தேசியகூட்டமைப்பின் முன்மொழிவுகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

வழிநடத்தல் குழுவில் நானும் அங்கத்தவராக இருக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்மொழிவுகள் எல்லாம் எனக்கு தெரியும். அவற்றில் சில விடயங்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை அவற்றை பேசித்தீர்ப்போம்.

தமிழர்கள் சுய மரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை எற்படுத்தலாம். ஆனாலும், அதனை ஏற்படுத்துவதில் எமக்குள்ள ஒரே ஒரு பிரச்சினை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாதது தான் அதனை ஏற்படுத்தினால் உடனடி புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தலாம்.

இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட இன்னொரு பிரச்சினை ஜனாதிபதி முறைமை அதை ஒழிப்பதில் மற்ற அனைத்து கட்சிகளிற்கும் சம்மதம் உண்டு ஆனால் சுதந்திரக் கட்சிக்கும் பெரமுனவிற்கும் அதில் உடன்பாடில்லை ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்தால் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும், எனெனில் நிலையான பாராளுமன்ற தேவை இந்த நடவடிக்கைகளின் மூலம் அதிகார பரவலாக்கலை எற்படுத்தலாம்.

நாம் எதிர்பார்க்கும் அதிகார பரவலாக்கலில் அரசாங்கம் மூன்று அதிகாரபடிநிலைகளை கொண்டதாக அமையும் மத்திய அரசு மாகாண அரசு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் மக்கள் பலமடைவார் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை நீங்களே தீர்மானிக்கும் விதமாக உள்ளூர் அதிகாரம் பலப்படுத்தப்படும்.

மாவட்ட ரீதியாக சிறுபான்மையினராக உள்ளவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களினதும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களினதும் வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களினதும் உரிமைகள் பாதுக்க பட வேண்டும் அதற்கேற்ற விதத்தில் எமது அதிகார பரவலாக்கம் அமையும்.

எமது அரசாங்கத்தில் தமிழ் மொழியை எல்லா அமைச்சிலும் அதிகார மட்டத்திலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றோம் எனினும் சில குறைபாடுகள் உள்ளன முக்கியமாக மொழிபெயர்ப்பு பிரச்சினை தமிழில் இருந்து சிங்களத்திற்கு சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட வேண்டும்.

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீனவ சங்கத்திற்கான கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய சோ.மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் அரசாங்க அதிபர் வேதநாயகன், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதற்காக 58 மில்லியன் ரூபா செலவில் இவ் மீனவ சங்கத்திற்கான கட்டிடங்கள் அமையப்பெறயிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.