தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவோம் – சஜித் உறுதி

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியமென தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்டாயமாக அதனை வழங்குவோமென தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசியல் தீர்வு முன்வைக்கப்படாது என பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நலன் கருதியே ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி தொடக்கம் வரவு – செலவுத் திட்டம் வரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு பேராதரவை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசியல் சதி முயற்சியின்போது கூட்டமைப்பினர் தம்முடன் கைகோர்த்திருந்தமையாலேயே அதை முறியடிக்க முடிந்ததாக குறிப்பிட்டார். எனவே, கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை தாம் கட்டாயம் வழங்குவோமென அவர் உறுதியளித்தார்.