தமிழர்களுக்கான உரிமைகளைக் கொடுத்த பின்னரே மத்திய அரசுடன் இணைவு – சி.வி

தமிழர்களுக்கான முழுமையான உரிமைகளை அரசாங்கம் கொடுத்த பின்னரே மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவரும், இந்திய ஒருங்கிணைப்பாளருமான ஃபேர்கஸ் அவுல்ட் இன்று (வியாழக்கிழமை) வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இச்சந்திப்பின் போதே இது குறித்து தெளிவுபடுத்தியதாக விக்னேஷ்வரன் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னரே தேசிய நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஆனால் முதலில் தமிழர்களை கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் பிரித்தானிய பிரதிநிதிகளிடம் முன்னாள் முதல்வர் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க பிரித்தானியா தனது முழு அழுத்தையும் வழங்கவேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது புதிய அரசியல் அமைப்பு உள்ளிட்ட சமகால விடயங்கள் குறித்தும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியதற்கான காரணம் குறித்து விக்னேஸ்வரனிடம் பிரித்தானிய பிரதிநிதிகள் வினவியுள்ளனர்.

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின் நிறைவில் தனது எதிர்கால பணிகளுக்கு பேர்கஸ் வாழ்த்து தெரிவித்தாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.