தமிழர்களின் ஆசனங்கள் குறையும் அபாயம்: முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் ஐங்கரநேசன்

வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவைத் தவற விடவேண்டாம் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது விகிதாசார தேர்தல் முறையில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதால், வாக்காளர்களின் எண்ணிக்கை மிக முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணையகத்தால் 2020ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்களைக் கணக்கெடுக்கும் படிவங்கள் (Body Count – BC forms) விநியோகிக்கப்பட்டுப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

எனினும், இப்படிவங்களைப் பூர்த்தி செய்து கையளிக்காதவர்கள் இன்னும் இருப்பதால், இம்மாதம் 29ஆம் திகதி வரையில் அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகம் அறியத்தந்துள்ளது.

இந்நிலையில் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான இந்தக் காலக்கெடுவை எவரும் தவறவிட்டுவிட வேண்டாம் என பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிப்பது ஒருவரது ஜனநாயகக் கடமை என்ற நிலையில் ஒருவர் தனது பெயரைத் தேர்தல்கள் ஆணையத்தால் ஆண்டு தோறும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் தேருநர் இடாப்பில் இடம்பெறச் செய்வது அவசியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா்ர.

மேலும், இவ்விடயத்தில் போதிய தெளிவின்மை மற்றும் அக்கறையின்மை காரணமாகப் பலரும் அதற்குரிய படிவங்களைப் பூர்த்திசெய்து கையளிக்காது இருந்து விட்டு, தேர்தல்களின் போது தங்களுக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லையென்று அங்கலாய்க்கின்றனர்.

போரினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள், அதைவிட அதிகமான புலப் பெயர்வுகள், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்பாத பெற்றோர்களின் மனப்பாங்கு போன்ற காரணங்களினால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வாக்காளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் எஞ்சியுள்ளவர்களில் அநேகர் வாக்காளர்களாகப் பதிவதற்குக் கரிசனை காட்டாதிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையில் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதால், வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவு மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் குறையச் செய்துவிடும் என ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணத்துக்கு, வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்கள் கொண்ட யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 2010ஆம் ஆண்டு 9 ஆசனங்கள் என்ற நிலையில் இருந்து, 2015ஆம் ஆண்டு 7 ஆசனங்கள் என்றாகியுள்ளது. இனிவரும் தேர்தல்களில் மேலும் இரண்டு ஆசனங்கள் குறைவடைந்து 5 ஆசனங்கள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைவதால் இம்மாவட்டங்களில் இருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து செல்கிறது.

எனவே, வாக்காளர் பதிவை ஊக்குவிப்பது அதிகாரிகளினது மாத்திரமல்லாது அரசியல்வாதிகளினதும் பொறுப்பாகும். இவ்விடயத்தை ஒரு தேசியப் பணியாகக் கருதி அனைத்துத் தரப்பும் இதில் அக்கறைகொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.