தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை – சீ.வி.கே

தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவரல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் அவரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக தன்மையை எப்போதும் கைக்கொண்டவர்கள். அதனால் தான் கிராம அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு விரோதமாக விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் செயற்படவில்லை. தமிழரசுக்கட்சியில் இருக்கும் சிலர் அந்தக் காலங்களில் இருந்தவர்கள் அல்ல.

மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தவர். அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது காலத்திற்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றார். அதை மதிக்க வேண்டும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.