தமிழனைப் பழிதீர்த்த பாதகர் புதுவடிவம் எடுத்துள்ளார் பாருமினே!

உண்மை, நேர்மை, நியாயம், நீதி இவற்றைத் தவிர வேறு எந்தப் பொய்யுரையும் மக்கள் மத்தியில் எடுபடமாட்டாது.

உண்மையை யார் கூறினாலும் அதை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்பதற்கு அப்பால் கடவுளும் அதற்குத் துணை செய்வார்.

ஆனால் அரசியல்வாதிகள் சிலர் பொய்யுரைத்து புகழ்பெற நினைக்கிறார்கள். பொய்யுரை ஒருபோதும் அரியணை ஏறாது என்பது சர்வ நிச்சயம்.

கடவுள், ஊழ்வினை, கர்மா பாவம், புண்ணியம் என்ற விடயங்களில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொள்வார்கள்.

ஊழ்வினை வந்துருத்தும் என்பதால்தான் நம் தமிழ் மன்னர்களும் மந்திரிகளும் நீதியோடு ஆட்சி புரிந்தனர்.

கோவலனின் விடயத்தில் தன் தீர்ப்பு பிழைத்து விட்டது என்று உறுதி செய்யப்பட்ட கணமே பாண்டிய மன்னன் உயிர் நீத்து விடுகிறான். இந்த உன்னதமான அரசாட்சியை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

ஆனால், இங்கு சில அரசியல்வாதிகள் கண்டபாட்டில் பொய்யுரைத்து சதி செய்கின்றார்கள். தனி மனித பழிவாங்கலுக்காக தமக்குக் கிடைத்த பதவியைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய பாதகர்களை மக்கள் நிச்சயம் இனம் காண வேண்டும்.

ஆட்சி அதிகாரம் தம் பக்கம் இருந்த போது நீதியை புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது பதவி ஆசைக்காக மற்றவர்களின் ஏவலுக்கு இசைகின்றனர்.

இத்தகையவர்களால் நீதியை உண்மையை எழுதுகின்றவர்களுக்கு உயிராபத்தும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு.

இதுபற்றியயல்லாம் எம் மக்களோடு நாம் விரிவாக கதைக்க வேண்டும். ஏனென்றால் இப்போது வடபுலத்தின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.

அரசியல்வாதிகள் சிலரின் உரைகளைப் பார்க்கும் போது, தனி மனித உயிருக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது.

சில காலங்களுக்கு முன்னர் வடக்கு முதலமைச்சரின் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வந்ததான செய்திகளை அறிந்திருக்கின்றோம். இப்போது முதலமைச்சரை நோக்கி சிலர் கடுமையாகத் தாக்குகின்றனர்.

2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் போது அரசின் பக்கம் நின்று தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதன் மூலமே அரசு வெற்றியடையலாம் என ஆலோசனை வழங்கிய முக்கிய நபர் ஒருவர் இப்போது தமிழ் அரசியலில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு சதி செய்கிறார்.

மக்களின் வாக்குகளால் வெற்றி பெறாத அவர், காலியாகிப் போன இடத்தைப் பிடித்துக் கொண்டு முதலமைச்சரை, அவருக்கு ஆதரவானவர்களை நோக்கி அரசியல் ரீதியில் தாக்குவதைப் பார்க்கும் போது ஒரு பெரும் பேராபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர முடிகின்றது.

இதற்கு குறித்த நபர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆற்றிய உரைகள், கருத்துக்கள் சான்றாக இருக்கின்றன.

எனவே இன்றைய சூழ்நிலையில், பொய்யுரைத்து அரசியலை திசை திருப்ப நினைப்பவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

1 COMMENT

  1. யார் இந்தக் கறுப்பாடு ? செம்மறித் தோல் போர்த்திய ஓநாய்? மக்களுக்கு யார் வெளிப்படுத்துவது? தெரிந்தவர் அறிந்தவர் வெளிப் படத்தவது தர்மம் இல்லையா?

LEAVE A REPLY