தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன்? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இதுவரை அமைக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும்” என்று 2015-2016-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மக்களுக்கு உலகத்தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் 3 பட்ஜெட்டுகள் கடந்து சென்றுவிட்ட நிலையிலும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த விளக்க முடியாத தாமதம், தமிழகத்திற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் கூட மத்திய பா.ஜ.க. அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள புதுகோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட 5 இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.

இந்த 5 இடங்களிலும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பி விட்டது. அதன்பிறகு, தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், “2017 டிசம்பர் 31-ந் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலேயே கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது.

ஆனால், இன்று வரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய – மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை. “ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்” என்று 2017-2018-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல் வடிவம் பெற்று விட்ட நிலையில், அதற்கு முன்பே 2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடத்தும் கபட நாடகமே காரணம்.

தமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் இங்குள்ள அ.தி.மு.க. அரசுக்கோ, சுகாதாரத்துறை அமைச்சருக்கோ சிறிதும் அக்கறையில்லை என்பது இதன்மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு உள்ள பலத்தை பயன்படுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை உடனே செயல்படுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த முயற்சிக்கு மாநிலங்களவையில் உள்ள தி.மு.க. உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவேளை, அந்த பலத்தைப் பயன்படுத்தத் தவறினால், ‘ஒன்றுக்கும் உதவாத ஒதியமரம் போன்றதுதான் அந்த பலம்’ என்று தமிழக மக்கள் முடிவுசெய்து விடுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY