தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் திமுகவினர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில், தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை தேவை. வீணாகும் மழை நீரை சேமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

தலித்துக்களுக்காகவும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்திற்காகவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போராட்டம் நடத்தியதை, மேலாண்மை வாரியத்திற்காக போராட்டம் நடத்தியதாக முரசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டு திமுக தொண்டர்களை ஏமாற்றுகிறது.

தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் திமுகவினர். கருப்புக் கொடி காட்டுவது தங்கள் தவறுகளை மறைப்பதற்குத் தான்; தமிழகத்தில் பாஜக ஆட்சி வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். திமுகவினர் பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்.

ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டம், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் ஆகியவற்றின் போது சில தலைவர்கள் பேசிய வார்த்தைகள் தமிழர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகள். பிரதமருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம், தமிழகத்திற்கு எதிராகவும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்டது.

தற்போது எல்லா இயக்கங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களின் பெருமுயற்சியின் விளைவுதான் ஜல்லிக்கட்டு போராட்டம். இதை நான் எப்போது வேண்டுமானாலும் சொல்லுவேன். எல்லா இயக்கங்களிலும் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள், தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த நல்ல திட்டமும் வந்துவிடக்கூடாது என ஒரு கூட்டம் நினைக்கிறது என கூறினார்.

LEAVE A REPLY