தடம்மாறும் சம்பந்தரும், தடுமாறும் விக்னேஸ்வரனும் – சேயோன்!

sambandhan_aதமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்வோர் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை எங்கே கொண்டுபோய் புதைக்கப் போகின்றார்கள் என்ற எண்ணும் அளவிற்குக் கடந்த ஒரு வார காலப்பகுதிகள் நிகழ்ந்தேறிய அரசியல்

சம்பவங்கள் அமைந்துள்ளன.
ஒருபுறத்தில் ஸ்கொட்லாந்தின் சமஸ்டி முறையை ஆராய்வதாகக் கூறிக்கொண்டு சம்பந்தரும், அவரது பரிவாரங்களும்

பிரித்தானியாவில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு அரசியல் பித்தலாட்டத்தில் ஈடுபட, மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட தமிழ் மக்கள் பேரவையோ சமஸ்டித் தீர்வு எனும் பெயரில் தமிழீழ தேசத்தின் தனியரசு இலட்சியத்திற்கு சாவுமணி அடிக்கும் வகையிலான தீர்வுப் பொதியொன்றை வெளியிட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதி பற்றிய எமது பார்வையை முன்வைப்பதற்கு முன்னர், சம்பந்தரின் ஸ்கொட்லாந்து சமஸ்டிப் பித்தலாட்டம் பற்றிய சில உண்மைகளை பிட்டு வைப்பது அவசியமாகிறது.
முதலாவதாக பிரித்தானியா (ஐக்கிய இராச்சியம்) ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்ட அரசு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பிரித்தானியாவைப் பொறுத்தவரை அதில் இறைமை (இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம்) பொருந்திய கட்டமைப்பாகத் திகழ்வது அதன் வெஸ்ற்மின்ஸ்ரர் நாடாளுமன்றம் ஆகும். இந் நாடாளுமன்றம் மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஒன்று முடியாட்சி பீடம். அடுத்தது பிரபுக்கள் சபை. மற்றையது பொதுச் சபை. இதில் முடியாட்சி பீடத்தைக் குறியீடு செய்பவராக இன்று எலிசபெத் மகாராணியார் திகழ்கின்றார். அடுத்த கட்டமைப்பான பிரபுக்கள் சபையானது பிரித்தானியாவின் நிலப்பிரபுக்களையும் (குறுநில மன்னர்கள் போன்றவர்கள்), வாழ்நாள் நிலப்பிரபுக்களையும் (கௌரவ அடிப்படையில் பிரபுப் பட்டம் பெற்றவர்கள்) கொண்ட அவையாகத் திகழ்கின்றது. இவற்றில் மூன்றாவது கட்டமைப்பான பொதுச் சபையே மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்டமைப்பாகும்.
பொதுவாக பிரித்தானிய மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் அல்லது அவர்களைப் பாதிக்கக்கூடிய சட்டங்கள் பொதுச் சபையிலேயே அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் அவற்றைக் கேள்விக்குறியாக்குவதற்கும், தேவையேற்பட்டால் அவற்றை நிறைவேற்ற விடாது இழுபறி நிலையை ஏற்படுத்துவதற்குமான அதிகாரம் பிரபுக்கள் சபைக்கு உண்டு. இவ்விரு சபைகளையும் ஒரு சட்டமூலம் வெற்றிகரமாகக் கடந்தாலும், அதன் பின்னர் முடியாட்சி பீடத்தின் (மகாராணியின் ஒப்புதலை) அது பெறவேண்டும். அல்லாது போனால் அது சட்டம் ஆகாது.
ஆக வெஸ்ற்மின்ஸ்ரர் நாடாளுமன்றத்தின் இம் மூன்று பிரிவுகளும் ஒத்திசைவாக இயங்கும் பொழுது, பிரித்தானிய மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கக்கூடிய அல்லது அவர்களைப் பாதிக்கக்கூடிய எந்தச் சட்டமும் நிறைவேற்றப்படலாம். அவ்வாறான இறைமையைக் கொண்ட கட்டமைப்பாகவே வெஸ்ற்மின்ஸ்ரர் நாடாளுமன்றம் திகழ்கின்றது.
தற்போதைய பிரித்தானியா என்பது நான்கு தேசங்களைக் கொண்டது: இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவை அந் நான்கு தேசங்களாகும். இதில் வேல்ஸ் பல நூற்றாண்டுகளாகவே இங்கிலாந்தின் முடியாட்சி பீடத்திற்கு உட்பட தேசமாகவே விளங்கி வந்துள்ளது. மறுபுறத்தில் வட அயர்லாந்து என்பது 1921ஆம் ஆண்டு அயர்லாந்து தேசத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் நில ஆளுகைக்கு உட்பட்ட தேசமாகப் பரிணமித்துள்ளது. அதற்கு முன்னர் வட அயர்லாந்து என்று அழைக்கப்பட்ட ஒரு தேசம் பிரித்தானியாவில் இருக்கவில்லை. மாறாக பிரித்தானியாவின் காலனியாக விளங்கிய அயர்லாந்து என்ற தேசத்திற்கு உட்பட அதன் வடபுல நிலப்பகுதியாகவே வட அயர்லாந்து விளங்கியது.
ஆனால் ஸ்கொட்லாந்தின் நிலைமை அவ்வாறு இல்லை. பல நூற்றாண்டுகளாகத் தனியரசாக விளங்கிய ஸ்கொட்லாந்து தேசம், 1707ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் இணைந்து கொண்டது. அதற்கு முன்னர் ஏறத்தாள ஒரு நூற்றாண்டு காலமாக (1603ஆம் ஆண்டு முதல்) இங்கிலாந்தையும், ஸ்கொட்லாந்தையும் ஒரே மன்னர்களே ஆட்சி செய்தாலும், இரண்டு வெவ்வேறு அரசுகளாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன. எனினும் 1707ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்றமும், இங்கிலாந்தின் நாடாளுமன்றமும் ஒரு நாடாகச் சங்கமிக்கும் சட்டங்களை நிறைவேற்றியதை அடுத்துத் தனியரசு நிலையை ஸ்கொட்லாந்து இழந்தது.
இருந்த பொழுதும் தனித்துவமான தேசியப் பண்புகளை ஸ்கொட்லாந்து தேசம் கொண்டிருப்பால் 1707ஆம் ஆண்டுக்குப் பின்னரும், அங்கு தனியான நீதித்துறைப் பொறிமுறையே பேணப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவில் அதியுச்ச அதிகாரத்தைக் கொண்ட நீதிமன்றமாக அதன் உச்ச நீதிமன்றம் திகழ்ந்தாலும், ஸ்கொட்லாந்தின் சட்டம், ஒழுங்கு என்று வரும் பொழுது எல்லா விடயங்களில் அதற்கு நியாயாதிக்கம் இல்லை.
அத்தோடு, ஸ்கொட்லாந்திற்குத் தனியான வைப்பகமும் உண்டு. இவ் வைப்பகமானது இங்கிலாந்தும், ஸ்கொட்லாந்தும் ஒன்றாகச் சங்கமிப்பதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (1695ஆம் ஆண்டு) உருவாக்கப்பட்ட கட்டமைப்பாகும். இதற்கு ஸ்கொட்லாந்திற்கான தனி நாணயங்களை அச்சிட்டுப் புழக்கத்தில் விடும் அதிகாரமும் உண்டு.
இவ்வாறு தனியான நீதித்துறையையும், வைப்பகத்தையும், நாணயத்தையும் கொண்ட ஸ்கொட்லாந்து தேசத்திற்கு சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கம் வாயிலாகத் தனியான மாநில நாடாளுமன்றத்தையும், ஆட்சியதிகாரத்தையும் (அரசாங்கம்) வழங்குவதற்கு 1997ஆம் ஆண்டு ரொனி பிளேயரின் அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கான பொது வாக்கெடுப்பு அவ்வாண்டு நடாத்தப்பட்டு, மறு ஆண்டு இதற்கான சட்டம் வெஸ்ற்மின்ஸ்ரர் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு முதல் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்றத்திடம் இருந்து அதிகாரத்தைப் பரவலாக்கம் பெற்ற கட்டமைப்பாக ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்றமும், அதற்குப் பொறுப்புக்கூறும் ஆட்சியமைப்பாக ஸ்கொட்லாந்தின் அரசாங்கமும் இயங்கி வருகின்றன.
ஆனால் இவ் அதிகாரங்கள் அனைத்தையும் தேவையேற்படும் பட்சத்தில் கையகப்படுத்தும் உரிமை வெஸ்ற்மின்ஸ்ரர் நாடாளுமன்றத்திற்கு உண்டு. அதாவது வெஸ்ற்மின்ஸ்ரர் நாடாளுமன்றத்தின் கட்டமைப்புக்களான பொதுச் சபையும், பிரபுக்கள் சபையும், முடியாட்சி பீடமும் நினைத்தால் இன்னுமொரு சட்டத்தை நிறைவேற்றி ஸ்கொட்லாந்து தேசத்திற்கு பரவலாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்களைப் பறிக்கலாம்.
இதுதான் ஒற்றையாட்சியமைப்புக்களின் பண்பியல்பாகும். இவற்றை அரசியல் அகராதியில் எவரும் சமஸ்டி என்று அழைப்பது கிடையாது. அதாவது ஸ்கொட்ல்ந்தில் சமஸ்டி அமைப்பு நடைமுறையில் இல்லை.
ஒரு அரசு சமஸ்டி அமைப்பாக விளங்கும் பட்சத்தில், அதன் அதியுச்ச அதிகாரங்கள் (இறைமை) ஒரு கட்டமைப்பிடம் குவிந்திருப்பதில்லை. அந்த வகையில் ஒரு சமஸ்டி அரசில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் உரிமை மத்திய அரசுக்கோ அன்றி அதன் நாடாளுமன்றத்திற்கோ இருப்பதில்லை. அவ்வாறு மத்திய அரசு செய்வதாயின் அது ஒரு ஆயுதப் புரட்சியை நிகழ்த்தியாக வேண்டும்.
யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது ஸ்கொட்லாந்தின் சமஸ்டி அமைப்பை ஆராயப் போவதாக சம்பந்தரும், அவரது பரிவாரங்களும் பிரித்தானியாவில் மேற்கொண்டிருக்கும் சுற்றுப்பயணங்களை என்னவென்று சொல்வது? உண்மையில் சமஸ்டி அமைப்பை ஆராயும் ஆவல் சம்பந்தருக்கு இருந்தால் தனது பரிவாரங்களை அழைத்துக் கொண்டு அவர் அமெரிக்காவிற்கு அல்லது சுவிற்சர்லாந்திற்கு சென்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் கனடாவிற்காவது அவர் சென்றிருக்கலாம்.
அதனை விடுத்து சமஸ்டியின் பெயரில் பிரித்தானியாவில் சம்பந்தர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதானது, தமிழர்களை ஏமாந்த சோணகிரிகளாக அவர் கருதுகின்றாரா? என்றே ஐயப்பட வைக்கின்றது.
இவ்வாறு சமஸ்டியின் பெயரில் தமிழ் மக்களின் தலையில் சம்பந்தர் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாகச் செயற்படப் போகின்றது என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையோ, தமிழீழ தேசத்தின் தனியரசு இலட்சியத்திற்கு சாவுமணி அடிக்கும் தீர்வுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவது சமஸ்டித் தீர்வல்ல. தமது தாயக மண்ணில், தமது தேசிய அடையாளத்தைப் பேணக் கூடிய வகையிலான தன்னாட்சியுரிமைத் தீர்வையே தமிழர்கள் வேண்டி நிற்கின்றார்கள். இதற்கான முதற்படியாக வேண்டுமென்றால் சமஸ்டி இருக்கலாம். ஆனால் அதுவே முடிவாக இருக்க முடியாது. அதாவது சமஸ்டி என்பது ஒரு இடைக்கால ஒழுங்காக இருக்க முடியுமே தவிர, அது தமிழினத்தின் வேணவாவைப் பிரதிபலிக்கும் தீர்வாக இருக்க முடியாது.
அவ்வாறு தமிழர்களின் தன்னாட்சியுரிமைப் பயணத்தில் ஒரு இடைக்கால ஒழுங்காகச் சமஸ்டித் தீர்வைத் தமிழ் மக்கள் பேரவை முன்வைத்திருந்தால் அதனை நாம் ஆழமாகப் பரிசீலனைக்கு உட்படுத்தலாம். ஆனால் பேரவையின் தீர்வுத் திட்டம் அப்படியாக இல்லை.
பேரவை வெளியிட்டிருக்கும் தீர்வுத் திட்டத்தின் 1.4 சரத்து பின்வருமாறு கூறுகின்றது: ‘தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்.’
இது ஒரு அபத்தமான சரத்து: ஆபத்தானதும் கூட. ஏனென்றால் சுயநிர்ணய உரிமை (தன்னாட்சியுரிமை) என்பது அதன் முழுமையான அர்த்தத்தில் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதையே குறிக்கின்றது. சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கும் ஒரு தேசம் விரும்பினால் அவ் உரிமையின் அடிப்படையில் இன்னொரு தேசத்தோடு இணைந்து வாழலாம். இதனையே அரசியல் அறிஞர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்கின்றார்கள். ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமையை ஒரு தேசம் ஏற்பதன் அர்த்தம் வெளியக சுயநிர்ணய உரிமை என்று அழைக்கப்படும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையைக் கைவிடுவது அல்ல.
இதற்கான உதாரணமாக கியூபெக், ஸ்கொட்லாந்து ஆகிய தேசங்களின் தன்னாட்சியுரிமையை நாம் குறிப்பிடலாம். இவ்விரு தேசங்களும் முறையே கனடா, பிரித்தானியா ஆகிய அரசுகளுக்கு உட்பட்ட மாநில சுயாட்சி முறைமையை ஏற்றிருந்தாலும், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமது உரிமையை இவை கைவிட்டதில்லை. 1995ஆம் ஆண்டு கியூபெக் தேசமும், 2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து தேசமும் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது பற்றிய பொது வாக்கெடுப்பில் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியிருந்தன.
ஆக, தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தாலும் சரி, அரசியல் நடைமுறையின் படி பார்த்தாலும் சரி, எந்தவிதமான சுயாட்சி ஒழுங்கிற்கு ஒரு தேசம் உட்பட்டிருந்தாலும், தேவைப்படும் பொழுது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அது பிரிந்து சென்று தனியரசு அமைக்கலாம்.
இப்படியிருக்கும் பொழுது எதற்காகப் பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கான பற்றுறுதியைத் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும்? அவ்வாறு செய்வது தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கு சாவுமணி அடிப்பதாக அல்லவா அமையும்? இது பேரவையின் அரசியல் விற்பன்னர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது புரியவில்லையா?
இதனைவிட மேலும் பல குறைபாடுகள் பேரவையின் தீர்வு யோசனையில் காணப்படுகின்றன. இலங்கை ஒரு பௌத்த சிங்கள அரசு என்ற நிலையில் இருந்து மதசார்பற்ற அரசு என்ற நிலைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தும் பேரவை, சிறீலங்கா என்ற அப்பட்டமான பௌத்த சிங்களப் பெயர் மாற்றப்படுவது பற்றி எதுவுமே கூறவில்லை. சிறீலங்கா (அல்லது இலங்கை என்று பேரவை குறிப்பிடும் அரசு) வாளேந்திய சிங்கக் கொடியை அகற்ற வேண்டிய அவசியம் பற்றியும் அது மூச்சு விடவில்லை.
இதனை விட ஒரு மாநிலம் சமஸ்டி அமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முயற்சிகளில் ஈடுபடும் பட்சத்தில் அவசர கால நிலையைப் பிரகடனம் செய்து மாநிலத்தின் அதிகாரங்களை நாட்டு அதிபர் கையகப்படுத்தலாம் என்று பேரவையின் தீர்வுத் திட்டத்தின் 21.1 சரத்து குறிப்பிடுகின்றது. அதாவது தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனியரசை அமைக்க முற்பட்டால் உடனடியாக மாநில அரசை மத்திய அரசு கையகப்படுத்தலாம் என்கின்றது பேரவை. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டிய பேரவை, எதற்காகச் சிங்களவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாறான திட்டத்தைத் தனது தீர்வு யோசனையில் உள்ளடக்கியிருக்கின்றது?
இங்கு ஆசுவாசமளிக்கக்கூடியதாக ஒரேயொரு விடயம்தான் உள்ளது. அதாவது பேரவை வெளியிட்ட தீர்வு யோசனையைத் தயாரிப்பதில் வடதமிழீழ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எவ்வித பங்களிப்பையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தம்தான் காரணம் என்று அவரே ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
ஆனாலும் இது இன்னொரு உண்மையைப் புலப்படுத்துகின்றது. தடம்மாறிப் பயணிக்கும் சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சரியான தடத்தில் இட்டுச் செல்வதற்கும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலட்சிய உறுதியோடு முன்னகர்த்துவதற்கும் தேவையான மக்கள் ஆணையைக் கொண்டுள்ள விக்னேஸ்வரன் அவர்கள், இப்பொழுது தடுமாறுகின்றார் என்பதுதான் அது. விக்னேஸ்வரனின் தடுமாற்றத்தின் விளைவாகவே தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு சாவுமணி அடிக்கும் வகையிலான தீர்வு யோசனையைத் தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
தடம்மாறிப் பயணிக்கும் சம்பந்தரை சரியான தடத்திற்குக் கொண்டு வருவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனாலும் தனது தடுமாற்றத்திற்கு விக்னேஸ்வரன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தால் நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் மக்கள் பேரவையையும் சரியான தடத்திற்கு அவரால் இட்டுச் செல்ல முடியும். தடுமாற்றம் காரணமாக 2014ஆம் ஆண்டு இனவழிப்புத் தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்ற மறுத்த விக்னேஸ்வரன், பின்னர் கடந்த ஆண்டு அதே தீர்மானத்தை நிறைவேற்றியதை இதற்கான சான்றாக நாம் கொள்ளலாம்.
ஆனால் இங்கு எழும் மில்லியன் டொலர் கேள்வி இதுதான்: தனது தடுமாற்றத்திற்கு எப்பொழுது விக்னேஸ்வரன் முற்றுப்புள்ளி வைப்பார்?

LEAVE A REPLY