ட்ரான்ஸ் பசுபிக் வர்த்தக உடன்படிக்கையில் பிரித்தானியா! – ஜப்பான் வரவேற்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகிய பின்னர், ட்ரான்ஸ் பசுபிக் வர்த்தக உடன்படிக்கையில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கையில் இணைந்துகொள்ள ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர், உலக நாடுகளுடனான தொடர்பை வலுப்படுத்துவது அவசியமென ஜப்பான் பிரதமர் ஸின்ஸோ அபே குறிப்பிட்டுள்ளார்.

த பினான்ஸியல் டைம்ஸ் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் அபே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உடன்பாடற்ற பிரெக்சிற்றினால் ஏற்படும் விளைவுகளை தடுக்க, பிரித்தானியாவும் ஐரோப்பாவும் புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரான்ஸ் பசுபிக் வர்த்தக உடன்படிக்கையில் ஜப்பான், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் மலேசியா உள்ளிட்ட 11 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த உடன்படிக்கையில் அங்கம் வகித்துவந்த அமெரிக்கா, கடந்த வருடம் அதிலிருந்து விலகிக் கொண்டது.

இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகவுள்ளது. அதன் பின்னர், ஒன்றியத்திற்கு வெளியே வர்த்தக தொடர்புகளை அதிகரிப்பது அவசியமென வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.