ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் கரோனா தொற்றால் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர்(வயது42) கரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளார் என்று அவரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருந்த சில வாரங்களுக்கு முன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் , இளைய மகன் பாரன் ட்ரம்ப் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து, மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 2-வது கரோனா அலை மோசமான பாதிப்பை அளிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டர்ம்ப் ஜூனியரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜூனியர் ட்ரம்ப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு இந்த வாரம் தொடக்கத்தில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து, தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

ஜூனியர் ட்ரம்ப்புக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் கூறிய ஆலோசனைப்படி, அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்து தனிமையில் இருந்து வருகிறார் “ எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தந்தை டொனால்ட் ட்ரம்புக்காக ட்ரம்ப் ஜூனியர் நாடுமுழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்தான் வெற்றி பெற்றுள்ளார்.