டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மையே – பன்னீர்செல்வம்

கடந்த ஆண்டு டி.டி.வி. தினகரனை இருவருக்கும் பொதுவான நண்பரின் வீட்டில் சந்தித்தது உண்மை தான் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மனம் விட்டு பேசுவதற்காகவும், அரசியல் நாகரீகத்திற்காகவும் டி.டி.வி. தினகரனின் விருப்பத்தின் பேரில் தான் அவரை சந்திக்க சென்றதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பு கடந்த 2017 ஜுலை மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

டி.டி.வி. தினகரன் மனம்திருந்தி ஏதாவது நல்ல வார்த்தை பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் அவரை சந்திக்க சென்றதாகவும், ஆனால் டி.டி.வி. சிறிதும் மனம் மாறாமல் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கிலேயே தன்னிடம் பேசியதாகவும் கூறினார்.

அவரை சந்தித்த சில நாட்களில் டி.டி.வி.யை முதல்வர் எடப்பாடி முழுவதுமாக பிரிந்த பிறகு தாம் அவருடன் இணைந்ததாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், முதல்வருடன் இணைந்த பின்னர் தினகரனுடன் எவ்வித தொடர்பபோ, சந்திப்போ நிகழவில்லை என்று கூறினார்.

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கும், கட்சிக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே தற்போது தினகரனின் நோக்கமாக உள்ளதாக கூறினார்.

தினகரனூடாக சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் தம்மிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறினார். இப்படி தரக்குறைவான அரசியல் செய்வார் என தாம் எதிர்பார்க்கவில்லை என பன்னீர்செல்வம் கூறினார்.