டிரம்ப் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் அமெரிக்க தூதருக்கு சம்மன்

பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நிதியை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மேலும் பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை குற்றம்சாட்டின.

இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய 255 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1,657 கோடி) அமெரிக்கா நிறுத்தி வைத்தது. இந்த தொகையை நிரந்தரமாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று பாகிஸ்தான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) கொடுத்துள்ளது. இதற்கு பிரதிபலனாக எதையும் பாகிஸ்தான் நமக்கு தரவில்லை. மாறாக, நமது தலைவர்களை (ஜனாதிபதிகள்) முட்டாள்களாக கருதி பொய்களை கூறி வந்து இருக்கிறது. ஏமாற்றியும் உள்ளது. நாம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை வேட்டையாடிக்கொண்டு இருக்கிறோம். அதே நேரம் பாகிஸ்தான் அந்த பயங்கரவாதிகளுக்கு தனது நாட்டில் புகலிடம் அளித்து பாதுகாத்து வருகிறது. இனிமேலும் இதுபோல் நடப்பதை நம்மால் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட நிதி உதவியையும் ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்தது.

டொனால்டு டிரம்பின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி, தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரத்தில் பணியாற்றி வரும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலேவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அமெரிக்க தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY