டிசெம்பர் வரை பொறுத்திருக்கக் கோருகிறார் மைத்திரி! – சந்திரிகாவும் களமிறங்கினார்

கூட்டு அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், டிசெம்பர் வரையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி அணியினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் இரண்டு விடயங்களை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்பது, பிரதான நிபந்தனையாகும். அவ்வாறு இல்லாவிடின், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தங்களை அமர்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்பது, இரண்டாவது விடயமாகும் என்றும் அறியமுடிகின்றது.

இதேவேளை, இந்தக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அடுத்த பேச்சுவார்த்தையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பங்குபற்றச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. எனினும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறித்து எந்தவித உத்தியோகபூர்வத் தகவலும் வெளியாகவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதற்கு முன்னரே, இந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்தச் சந்திப்பின்போது, அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை, அரசாங்கத்துக்குள்ளே வைத்துகொள்ளும் முயற்சியில், ஈடுபடுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அதனடிப்படையில், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள உறுப்பினர்கள் குழுவுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த வாரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எடுத்துள்ள முயற்சி தொடரும் என்றும், அரசாங்கத்தைக் கவிழ்க்க விடாது, தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY