ஜெயலலிதா மரண விசாரணை- இரு அப்போலோ வைத்தியர்கள் ஆஜர்!

மறைந்த முன்னாள் தமிழக முத்லமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று (புதன்கிழமை) இரு அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ வைத்தியர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றார்கள்.

இந்நிலையில், அப்போலோவில் உள்ள தொற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியர் ராமகோபால கிருஷ்ணன், தீவிர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் பஞ்சாபிகேசன், நரம்பியல் சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் யுவஸ்ரீ ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

மேலும், இன்று மயக்கவியல் துறை வைத்தியர் மின்னல் எம்போர, வைத்தியர் சுதாகர் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் கொடுப்பதால் விசாரணையில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவர் கொடுக்கும் வாக்குமூலமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த வைத்தியர்களிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்தகட்டமாக மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

வைத்தியர்களிடம் விசாரணை நடத்தி முடித்ததும் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.