ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல்

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பப்பட்ட பலரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது. கால அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் அண்மையில் தள்ளுபடி செய்துள்ளது.ஏற்கனவே, ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ள ஆணையம், உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்படாவிட்டால் சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இனி ஆணையத்தில் ஆஜராகவுள்ள சாட்சியங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கடிதம் ஒன்று கொடுத்துள்ளோம் எனவும். தேவைப்பட்டால் நாங்கள் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வோம் என வழக்கறிஞர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY