ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சையில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவையில் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 19-ந் தேதி சென்னையில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மருத்துவ முகாம் நடத்தப்படும்.

டெல்டா மாவட்ட விவசாயத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு போய் சேரவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசு செயலற்று போய் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும், ஊழல் இருந்தது. மத்திய அரசு அப்போது சோதனை நடத்தியிருந்தால் அதிக ஆவணங்களை கைப்பற்றி இருக்க முடியும். அவர் இறந்தவுடன் அ.தி.மு.க. வினர் இணைந்திருந்த போது சோதனை நடத்தி இருந்தாலும் அதிக ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம்.

மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். 136 எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் தலையெழுத்து நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த எம்.எல்.ஏ.க்கள் யார்- யார்? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு தமிழக அரசு செயல்படுவதால் தமிழகத்தை பா.ஜனதா ஆட்சி செய்வதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். பா.ஜனதா நடவடிக்கை எல்லை தாண்டி உள்ளது.

பொதுவாக மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்பட வேண்டும். இதனால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும். ஆனால் இவர்கள் இணைந்து எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. வர்தா புயலுக்கு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

மோடி பதவிக்கு வந்த பிறகு எதுவும் சரியாக நடக்கவில்லை. இந்த சூழ்நிலையால் பா.ஜனதா தான் பலன் அடைந்து வருகிறது.

பருவமழைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் மழை சேதம் அதிகமாக உள்ளது. மத்திய அரசு வரிவசூல் மூலம் தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால் ஜி.எஸ்.டி வரி மக்களால் தாங்கமுடியாத வரியாக உள்ளது.

வருமான வரி சோதனை ஒருதலைபட்சமாக நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். சேகர்ரெட்டி முதல் பலரிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவு மக்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை. பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த போது தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் தவறு இல்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY