ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: சசிகலா- ஓ.பி.எஸ். உள்ளிட்ட 186 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பி.எஸ். மீது வழக்கு பதிவு செய்ய கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் புகழேந்தி, அ.தி.மு.க. தொண்டர் அணி என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அணியின் சார்பில் கடலூரை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் செல்வ வினாயகம் கடந்த மாதம் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா-ஓ.பி.எஸ். ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து மனுதாக்கல் செய்துள்ளார்.

சைதாப்பேட்டை 18-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் அவரது உடல் நலம் தேறி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அரசியல் லாபத்துக்காக அவரது மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அ.தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உள்ளிட்ட 186 பேர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தேனாம்பேட்டை போலீசில் கடந்த மே 20-ந்தேதி புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கோர்ட்டு 186 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மாஜிஸ்திரேட்டு ஜெ.மோகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இது தொடர்பாக வக்கீல் புகழேந்தி கூறும்போது, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யும் வரை ஓய மாட்டோம் என்றார்.

LEAVE A REPLY