ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவிப்பு

201602250113369462_Happy-Birthday-to-the-27-million-people-in-the-telephone_SECVPF.gifமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு 27 லட்சம் பேர் டெலிபோனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது.
புதிய ஏற்பாடு

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் சாதாரண மக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக புதிய ஏற்பாடுகளை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்திருந்தது.

அதன்படி, 7767020002 என்ற செல்போன் எண்ணும், 044–33124234 என்ற தொலைபேசி எண்ணும் வெளியிடப்பது.

தொலைபேசி எண்ணில் ‘24’ ஜெயலலிதா பிறந்த தேதியையும், ‘234’ என்ற எண் 234 சட்டசபை தொகுதியையும் குறிப்பதாக அமைந்தது.

அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்தனர். குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இளைய சமுதாயத்தினர் பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரு நிமிடத்தில் 6 ஆயிரம் பேர்

இதுகுறித்து அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் கே.சுவாமிநாதன் கூறியதாவது:–

முதல்–அமைச்சருக்கு உலகம் முழுவதும் தொண்டர்கள், அபிமானிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஏற்பாடு செய்து இருந்தோம். ஒரு நிமிடத்தில் 6 ஆயிரம் பேர் வரை இந்த குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

30 வினாடிகளில் பிறந்தநாள் செய்தியை பதிவு செய்ய வேண்டும். இன்று(நேற்று) மதியம் 2 மணியளவில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொண்டதால் எங்களுடைய சாப்ட்வேரை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
உலக நாடுகள்

குரு பகவான் சிம்ம ராசியிலும், கதிரவன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் போது வரும் பவுர்ணமி தினத்தன்று மக நட்சத்திரத்திலும், ரிஷப லக்னத்திலும் கூடும் புண்ணிய நாள் 22.2.2016. இந்த நாளில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் வந்ததால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான எண்கள் செயல்பட தொடங்கின.

மதுரையை அடுத்த மேலூரை சேர்ந்த பொன்னம்மாள்(வயது 79) என்ற மூதாட்டி பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், ‘அம்மா காப்பீட்டு திட்டத்தால் நான் உயிர் வாழ்ந்து வருகிறேன். இன்னும் நீங்கள்(ஜெயலலிதா) நிறைய ஆண்டுகள் வாழ்ந்து லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன் உள்பட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்தை பதிவு செய்துள்ளனர்.
27 லட்சம் வாழ்த்துக்கள்

இன்று(நேற்று) மாலை 5 மணி நிலவரப்படி, டெலிபோன் மூலம் 22 லட்சத்து 43 ஆயிரத்து 593 பேர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரவு 10 மணியளவில் வாழ்த்து தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது.

LEAVE A REPLY