ஜெனீவா தீர்மானம் – தூதுவரை திருப்பியழைக்க வேண்டுமென மொட்டு கட்சி கங்கணம்!

ஜெனீவாவிற்கான இலங்கையின் தூதுவரை அழைத்து ஜனாதிபதி கடுமையான அதிருப்தியை வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர இவ்வாறு கூறினார்.

மேலும் இராணுவத்தினரையும் தன்னையும் காட்டிக்கொடுத்துள்ளதாக களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தெட்டத்தெளிவாக கூறியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஜெனீவாவிற்கான இலங்கையின் தூதுவர் A.L.A. அஜீஸை மீண்டும் நாட்டுக்கு அழைத்து கடுமையான அதிருப்தியை வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1 புதிய தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், தனக்கு அறிவிக்கப்படாமல் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது அதன் செயலாளருக்கு தெரியாமலேயே அவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.