ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? கூட்டமைப்பு சவால்!

இலங்கை குறித்த ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றாவிடின் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா என தமிழ் தேசிய கூட்டமைப்பு சவால் விடுத்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு சாவல் விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை குறித்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கலப்பு நீதிமன்ற விசாரணை பொறிமுறையினை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை விடுத்து, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று பகிரங்கமாக உங்களால் கூற முடியுமா?. அவர் ஒரு விடயத்தினை செய்ய முடியும் என்றால் முடியும் என்றும், முடியாது என்றால் முடியாது என்றும் பகிரங்கமாக கூற கூடிய ஒருவர்.

எனவே முடிந்தால் அவர் போன்று கலப்பு நீதிமன்ற விசாரணை பொறிமுறையினை ஏற்றுக்கொள்ள முடியாது நாடாளுமன்றத்திற்கு வந்து கூறுகள்’ என தெரிவித்துள்ளார்.