ஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு – காஷ்மீரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பேர் இன்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்காம் மாவட்டத்தில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்த சண்டையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான நவீத் ஜாட் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.

மேலும் காஷ்மீரின் மூத்தப் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட நவீத் ஜாட் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஸ்ரீநகர் வைத்தியசாலையில் இருந்து பொலிஸ் பாதுகாவலையும் மீறி நவீத் ஜாட் தப்பிச்சென்ற நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.