ஜப்பான் பார்லிமென்ட் தேர்தல்: அபேவுக்கு வெற்றி வாய்ப்பு

‘ஜப்பான் பார்லி., தேர்தலில், பிரதமர், ஷின்சோ அபே தலைமையிலான, ஆளுங்கட்சி கூட்டணி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்’ என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபேவின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு வரை உள்ளது. எனினும், தனக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருதும், ஷின்சோ அபே, முன்கூட்டியே தேர்தலை நடத்தி, மீண்டும் பிரதமராவதற்கு முடிவு செய்தார். இதையடுத்து, ஜப்பான் பார்லிமென்டின் கீழ் சபையை கலைத்து, அவர் உத்தரவிட்டார். அக்., 22-ல், பார்லி., தேர்தல் நடக்க உள்ளது.தேர்தலில், ஆளும், லிபரல் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான, குடியரசு கட்சிக்கும், நேரடி போட்டி நிலவுகிறது.

டோக்கியோ மேயர், யுரிக்கோ கோய்க்கே, புதிதாக துவக்கிய, டோக்கியோ வாசிகள் கட்சியும், வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாட்டின் பொருளாதார நிலை, வட கொரியாவின் மிரட்டல், அமெரிக்காவுடனான உறவு ஆகியவை, பிரசாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்நிலையில், பார்லி., தேர்தலில், ‘பிரதமர், ஷின்சோ அபே தலைமையிலான கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றும்’ என, கருத்துக் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

ஜப்பான் முன்னணி செய்தி நிறுவனமான, ‘கைடோ நியூஸ்’ மற்றும் நிக்கி வணிக நாளிதழ் ஆகியவை, நடத்திய கருத்துக் கணிப்பில், ‘ஆளுங்கட்சி கூட்டணி, மொத்தமுள்ள, ௪௬௫ இடங்களில், ௩௦௦ இடங்களை கைப்பற்றும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு பிரபல நாளிதழின் கருத்துக் கணிப்பில், ‘ஆளும், லிபரல் குடியரசு கட்சி, தனித்தே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்; கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலே, ஷின்சோ அபே, மீண்டும் பிரதமர் ஆவார்’ என, கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY