ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்று எச்சரித்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி, அதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைவரும் புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் மாளிகையில் நேற்று இஸ்லாமியர்களின் நோன்பு மாதத்தை முன்னிட்டு தேசிய இப்தார் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இஸ்லாமிய மதத் தலைவர்களும், பெருமளவிலான இஸ்லாமிய பக்தர்களும் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் முன்னிலையில் உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி நாட்டு மக்கள் ஒருவரையொருவர் குரோதத்துடனும் சந்தேகத்துடனும் நோக்கும் நிலை நீடிக்கும் வரை நாட்டில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடியாதென தெரிவித்தார்.

அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக நிராகரிப்பதோடு, சகல இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கியுள்ள நெருக்குவாரங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் சிறிலங்கா ஜனாதிபதி, முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக ஐ.எஸ் தாக்குதல்களை அடுத்து பெருமளவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய் என குறிப்பிட்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி இந்த பிரசாரங்கள் தொடர்பில் பாதுகாப்புப் படையினரிடம் கலந்துரையாடி அறிக்கை ஒன்றினை தான் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக 559 முஸ்லிம்கள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விசாரணைகளின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார்.