ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு காரணம் ஈஸ்டர் தாக்குதலே – ரஞ்சன்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தபோதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமையே ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு காரணமென அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததற்கான உண்மையான காரணத்தை உணர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம். நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தல், ஜனாதிபதி செலவீனத்தை குறைத்தல், கொழும்பை அழகுப்படுத்தல் என அவரது செயற்பாடுகளை நாம் நிச்சயமாக வரவேற்கிறோம்.

அதேபோன்று, எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் எமது கடமைகளை எதிர்காலத்தில் சரிவர நிறைவேற்றுவோம்.

நாம் இந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம். 2015ஆம் ஆண்டு திருடர்களைப் பிடிப்போம் என்று உறுதி மொழிக்கூறித்தான் ஆட்சிக்கு வந்தோம்.

ஆனால், நாம் மக்களின் ஆணையை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி பிரதமரை திருடன் என்றும் பிரதமர் ஜனாதிபதியை திருடன் என்றும்தான் கூறிக்கொண்டிருந்தார்கள்.

அத்தோடு, 100 நாள் அரசாங்கத்தில் மத்திய வங்கிப் பிணை முறி மோசடி இடம்பெற்றது. இதனைவிட பிரதானமாக 2018 நவம்பர் 31ஆம் திகதி வவுனதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குப் பின்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இந்த தாக்குதல் இடம்பெற்றபோது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான ஹேமசிறி பெர்ணான்டோ, ஒரு பாரதூரமான கருத்தை வெளியிட்டிருந்தார்.

அதாவது, இந்த தாக்குதல் இடம்பெறும் என்று முன்கூட்டியே தங்களுக்குத் தெரியும் என்றும் ஆனால், இவ்வளவு பாரதூரமான தாக்குதலாக இடம்பெறும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படியான நபர்களிடமா நாம் இந்த அரசாங்கத்தை ஒப்படைத்தோம் என மக்கள் நினைத்தார்கள்.

இதன் விளைவாகத்தான் நாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தோம். இதனை எமது தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இனிமேல் இவ்வாறானதொரு தவறு இடம்பெறாத வகையில் செயற்பட வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.