ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு வழங்க ரெலோ முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோ அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கமைய சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அடைகலநாதன் இன்று (07) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சாரதாரண தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தமது கட்சியின் செயற்குழு ஏகோபித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சில மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, மற்றும் புளோட் ஆகியன தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் என்பதுடன் அதில் தமிழரசுக் கட்சி கடந்த மூன்றாம் திகதி சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்தது.

ரெலோவின் தவிசாளராக செயற்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அந்த கட்சியில் தான் வகித்த அனைத்து விதமான பதவிகளில் இருந்தும் விலகி சுயாதீன வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடதக்கது.