ஜனாதிபதி கோட்டபாய விஷப்பாம்புகளுடன் இணைந்திருக்கிறார்! முஜிபுர் ரஹ்மான் கடும் குற்றச்சாட்டு

ஜனாதிபதி இனவாதத்துக்கு எதிராக செயற்படுவதாக தெரிவிக்கின்றபோதும் அவர் இணைந்திருப்பது இனவாதத்தை போஷித்துவரும் விஷப்பாம்புகளுடனாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ஜனாதிபதி இனவாதத்தை எதிர்ப்பதாக தெரிவிக்கின்றபோதும் அவருடன் இருக்கும் ஒரு சிலர் அதனை போஷித்துவரக்கூடியவர்களாகும். ஏப்ரல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பினனர் அதனை பயன்படுத்திக்கொண்டு தேர்தல் மேடைதோறும் இனவாதத்தை தூண்டியே தேர்தல் பிரசாங்களில் அவர்கள் ஈடுபட்டுவந்தனர்.

இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை ஏற்படுத்தியவர்களும். குரோதத்தை வளர்த்துவந்தவர்களும் இன்று ஜனாதபதியுடனேயே இருக்கின்றனர். இந்த சகதிகள் ஒன்றிணைந்தே கோட்டாபய ராஜபக்ஷ்வை வெற்றிபெறச்செய்தார்கள்.

அன்று பண்டாரநாயக்கவும் இவ்வாறு செயற்பட்டே 1956இல் வெற்றிபெற்றார். இதனால் இறுதியில் அவர் இனவாத மதவாத முன்னணிகளுடன் கூட்டிணைந்து செயற்பட்டதால் தனது உயிரையும் இல்லாமலாக்கிக்கொண்டார். அதனால் அரசியல் வரலாற்றில் பண்டாரநாயக்கவின் பயணத்தை சற்று பார்க்கவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

ஜனாதிபதி இன்று இணைந்திருப்பது இவ்வாறான விஷப்பாம்புகளுடனாகும். அவர்களுடன் இணைந்தே பயணிக்கின்றார். அதனால் அந்த விஷப்பாம்புகள் எந்த நேரம் அவருக்கு எதிராக செயற்படும் என தெரிவிக்கமுடியாது. ஏனெனில் அவர் உருவாக்கி இருக்கும் இனவாத கூட்டணியை மீண்டும் நல்லவழிக்கு திருப்புவது இலகுவான விடயமல்ல. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எதனையும் பேசலாம்.

ஆனால் தேர்தலை வெற்றிகொள்ள அடிப்படையாக கடைப்பிடித்தது, இனவாதத்தையும் மதவாதத்தையும் என்பதை மறந்துவிடவேண்டாம். அதனால் அந்த வெற்றியின் பெறுபேறு மிகவும் பயங்கரமானதாகும். அதனால் ஜனாதிபதி தனது பயணத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவேண்டும்” என்றார்.