ஜனாதிபதி உண்மைகளை கூறுவதற்கான காரணம் இதுதான்!

எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் உறுப்பினர் ஆர். சம்பந்தன் நேற்று (08) உரையாற்றுகையில், அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எமக்கு உண்டு என்றும் கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாத்தின் இரண்டாம் நாளான நேற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார்.

ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டில் பல்லின சமூகங்கள் வாழுகின்றனர். இருந்த போதிலும் இந்த நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் பெரும்பான்மை மக்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏனைய சமூகங்களும் வாழ்கின்றனர். அவர்களை புறக்கணிக்க முடியாது. ஏனைய மக்களின் கலாசாரம், சமூக கட்டமைப்பு மதிக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் பிரிக்க முடியாத இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வை வழங்க முன்வரவேண்டும்.

இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று தெரிவித்த அவர் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்றும் கூறினார்..