ஜனாதிபதியின் சுதந்திர தின உரை பொருத்தமற்றது: ஐ.தே.க. குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர தின உரை முற்றிலும் அரசியல் சார்ந்தது. அத்தகையதொரு முக்கிய தினத்திற்கு அவரது உரை சற்றும் பொருத்தமற்றது என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து சுதந்திர தினத்தில் உரையாற்றியிருந்தால் அது நியாயமானது. ஆனால், ஜனாதிபதியின் உரை முழுமையாக அரசியல் இலாபம் தேடும் வகையில் அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு உடன்படப் போவதில்லை எனத் தெரிவித்து ஐ.தே.கட்சியை ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

அவ்வாறாயின், ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கையுடன் உடன்படப் போவதில்லை என்பதே தெளிவாகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.