ஜனாதிபதியின் அனுமதியின்றி அனுசரணை வழங்க முடியாது – விஜயதாஸ

ஜனாதிபதியின் அனுமதியின்றி இலங்கை தொடர்பாக பிரித்தானியாவின் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முடியாது என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை தொடர்பாக பிரித்தானியா கொண்டுவர இருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க ஜனாதிபதி எந்த அனுமதியும் வழங்கவில்லை.

ஜனாதிபதியின் அனுமதியின்றி இணை அனுசரணை வழங்க முடியாது. ஜெனீவாவில் உள்ள இலங்கை அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சு அன்றி வேறு நபர்களே உத்தரவுகளை வழங்குகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் இத்தகைய நிலை காணப்பட்டது. அன்று இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை இணை அனுசரணை வழங்கியது.

எவ்வாறாயினும் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதியின்றி இவ்வாறு இணை அனுசரணை வழங்க முடியாது.

இந்த நிலையில் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை தயாராகிறது. ஆனால் இதற்கு ஜனாதிபதி எந்த அனுமதியும் வழங்கவில்லை.

தற்பொழுது வெளிவிவகார அமைச்சு தொடர்பான முடிவுகள் நிதி அமைச்சிலிருந்தே எடுக்கப்படுகிறது.

அமைச்சருக்கோ செயலாளருக்கோ அவை குறித்து எதுவும் தெரியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.