ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால்தான் நாடு வளப்படுமா?- ஏற்கமுடியாது என்கிறார் ராஜித

ஒரு நாட்டை வளப்படுத்த ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ’19’ ஆவது திருத்தத்தில் உள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருந்த காலப்பகுதியில்தான் இந்த நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. யுத்தம் முதற்கொண்டு தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சிகள்வரை அந்தக்காலத்தில்தான் இடம்பெற்றன.

அதேபோன்று, இன்று உலகில் இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் ஜனாதிபதி முறைமை இல்லை. மாறாக, 19 ஆவது திருத்தச் சட்டத்தைப் போன்ற நல்லாட்சி அரசமைப்புக்களே அந்த நாடுகளில் காணப்படுகின்றன. இவைதான், அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்குக் காரணமாகும்.

எனவே, ஒரு நாட்டை முன்னேற்ற அதிகாரங்கள் அவசியம் என்பதை நான் என்றும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆணைக்குழுக்கள், நாடாளுமன்றின் அதிகாரங்கள் எல்லாம் ஜனாதிபதியிடம் குவிக்கப்படவுள்ளன.

அதிகாரம் ஒருவரிடம் குவிக்கப்படுவதால், குறித்த நபர் அழிவடைவதோடு நாடும் அழிவடையும். இதனைத்தான் நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.

நிதித்துறை, நிறைவேற்றுத் துறை, சட்டவாக்கத்துறை என மூன்றும் சரி சமனாகப் பயணிப்பதே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இவ்வாறு இல்லாவிட்டால் ஒரு நாட்டில் ஜனநாயகம் பலமானதாக இருக்காது. இது மக்களின் உரிமையையும் பாதிக்கும்” என்று தெரிவித்தார்.