ஜனாதிபதியாக கோட்டா வரவேண்டுமென்பதே மக்களின் விருப்பம் – மஹிந்தானந்த

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டுமென மக்கள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாடு திரும்பியிருந்தார்.

இதன்போது அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவரை பார்வையிடச் சென்றிருந்த மக்கள் கூட்டம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெற வேண்டுமென மக்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு எதிராக பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவர்மீது முன்வைக்கப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெறுவாரென்றும் அவருக்கே மக்களின் செல்வாக்கு அதிகம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.