ஜனநாயகம், இறையாண்மையை நிலைநிறுத்த அமெரிக்க தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – பொம்பியோ

இலங்கை சோஷலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கைக்கு அமெரிக்கா சார்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நோக்கமானது இரு நாடுகளுக்கிடையிலுமான பொதுவான அம்சம் என மைக் பொம்பியோ அறிக்கையூடாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஜனநாயகம், இறையாண்மையை நிலைநிறுத்த அமெரிக்க தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மக்களின் அபிவிருத்திக்காக சமாதானம், பொருளாதாரம், பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் ஊடாக சுதந்திரமான சிறந்த இந்து பசுபிக் வலயத்தை உருவாக்க தொடர்ந்தும் அர்ப்பணிப்பு செய்வதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், செழிப்பான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயலாற்ற எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.