ஜனநாயகத்தின் மற்றொரு படிக்கல் அரசியலமைப்பு நிர்ணய சபை

tkn-editoபல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒருமைப்பாடு நிறைந்த தேசத்துக்கு இந்தியா சிறந்ததொரு உதாரணம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மூலைமுடுக்குகளில் வாழ்கின்ற சமூகங்களை எடுத்துக் கொண்டால் அந்நாட்டில் பிரதானமாக நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக் கூறுகிறார்கள்.

அரசியலமைப்பில் மாத்திரம் இருபத்திரண்டு மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெருமளவு மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது.அவ்வாறாகவே பல்வேறு மதங்களும் அங்கு பின்பற்றப்படுகின்றன.

இந்தியாவில் இத்தனை சமூகப்பல்வகைமைத் தன்மை இருந்த போதிலும் அந்நாட்டின் குடிமகன் ஒவ்வொருவனும் தேசப்பற்று மிகுந்தவனாகவே காணப்படுகிறான். ‘இந்தியா தனது தேசம்’ என்பதுவும், ‘நான் ஒரு இந்தியன்’ என்பதுவும் இந்தியக் குடிமக்களின் இரத்தத்தில் ஊறிப் போன விடயங்கள்.

இதற்குக் காரணம் அந்நாட்டின் அரசியல் தன்மை ஆகும். மொழிகள், மதங்கள் வேறுபாடுகள் காரணமாக சமூகங்களுக்கிடையில் அவ்வப்போது மோதல்கள் எழாமலில்லை. ஆனாலும் பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவதென்பது அந்நாட்டில் குறிப்பிடும்படியாக இல்லை. அங்குள்ள பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் இனபேதம் பேசுவதில்லை. ஆட்சியில் உள்ள தலைவர்களும் சிறுபான்மை மக்களை அகௌரவப்படுத்துவதில்லை.

எனவேதான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தாய்நாடு என்ற பற்றுதலை நிறையவே கொண்டிருக்கிறான்.

இன ரீதியான அடக்குமுறையும் ஒதுக்கலும் எங்கு உள்ளதோ அங்குள்ள சிறுபான்மை மக்களிடம் தாயகப்பற்று மேலோங்கியிருக்குமென எதிர்பார்க்க முடியாது.

‘தேசப்பற்று’ என்பது உண்மையில் அரசியல்வாதிகளிடமிருந்தே தோற்றம் பெற்று வளர வேண்டும். அரசியலுக்காக இனவாதத்தைப் பயன்படுத்தாத பண்பு தேவை. அனைத்து இனங்களையும் சமமாக மதிக்கின்ற பக்குவம் அவசியம். இவையெல்லாம் அரசியல்வாதிகளின் உள்ளத்திலிருந்து வர வேண்டியவை.

இலங்கையைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் நாமெல்லாம் துரதிருஷ்டம் நிறைந்தவர்கள். அரசியல் நலன்களுக்காக அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே இனவாதம் பேசுகிறார்கள். பெரும்பான்மையின மக்களால் தாங்கள் வசீகரப்பட வேண்டுமென்பதற்காக சிறுபான்மையின மக்களை அகௌரவப்படுத்துகிறார்கள்; அவர்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்.

இன்றைய அரசாங்கத்தின் பிரதானமான எதிரணியாக விளங்குகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் சிறுபான்மை மக்களை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகபாடிகளும் தோன்றுகின்ற எந்தவொரு பிரசார மேடையிலும் இனவாதமொன்றே கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிங்கள மக்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக கவர்ந்து கொள்வதற்கான இலகுவான வழியாக அவர்கள் இனவாதத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்களின் பின்னால் இனவாதத்தின் பாதையில் செல்வதற்கு மக்கள் கூட்டமொன்று தயாராக உள்ளதை மறுப்பதற்கில்லை. இம்மக்களின் உள்ளத்தில் யாதார்த்தத்தையும் ஐக்கியத்தையும் விதைப்பது சுலபமான காரியமும் அல்ல.

இன்றைய அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்த நிலையில் அரசியலில் மற்றொரு பரிமாணத்துக்குச் செல்லத் தயாராகியிருக்கிறது. பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைக்கும் பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இப்பிரேரணையானது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென்பது உறுதியாகவே தெரிகிறது.

நாட்டின் நலன்களுக்கு ஒவ்வாத இன்றைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்பாட்டுடன் உள்ளதனால் இதற்கான அடித்தளமாகவே பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றும் திட்டத்தில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அடிப்படைவாதிகளின் நலன்களுக்காக நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்காமல் இழுத்தடிக்க முடியாதென்பதை ஜனாதிபதியும் பிரதமரும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

‘சமஷ்டி’ என்ற பெயரைக் கேட்டதும் தென்னிலங்கை அச்சம் கொள்வதும், ‘ஒற்றையாட்சி’ என்ற சொல்லைக் கேட்டதும் வடபகுதி கசப்புக் கொள்வதும் பாரம்பரியமாகிப் போயுள்ளதனால் இரு தரப்பினருக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையும் தென்னிலங்கையில் இம்மாதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைக்கும் யோசனையை மஹிந்த தரப்பு தீவிரமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே அரசு இவ்வாறானதொரு காரியத்தில் இறங்கியிருப்பதாக மஹிந்த அணியிலுள்ள விமல் வீரவன்ஸ எம்பி. கூறுகிறார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வை வழங்குவதே இதன் உள்நோக்கம் என்பதே விமல் வீரவன்ஸவின் கண்டுபிடிப்பு.

இதற்கு ஒரு படி மேலாகச் சென்று மஹிந்த ராஜபக்ஷ ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். இன்றைய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒத்தாசை வழங்கியதற்குப் பிரதியுபகாரமாகவே சம்பந்தன் எம்.பிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக மஹிந்த கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி மீது அன்றைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரமும் இவ்வாறுதான் இனவாதமாகப் பேசப்படுகிறது.

எதிரணியின் இவ்வாறான எதிர்ப்பலைகளையெல்லாம் தாண்டியபடியே தேசிய ஐக்கியத்தை நிலைநாட்டும் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமே ஐக்கியம் ஒன்றுதான் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதைத் தடுக்கும் விதத்திலேயே எதிரணியினரின் பிரசாரங்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இவையெல்லாம் அரசுக்கு பாரிய சவால்களென்பதை மறுப்பதற்கில்லை.
Email Facebook Twitter Google+ Pinterest PrintFriendly

LEAVE A REPLY