சொந்த பந்தங்களை பதவிகளில் அமர்த்தினால் நாடு முன்னேறாது : டக்ளஸ்

ஆட்சியில் தமது ஆதரவாளர்ளையும், சொந்த பந்தங்களையும் ஆட்சிப் பதவிகளில் அமர்த்தினால் இந்த நாட்டில் அரச தொழில் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்பாடு காரணமாக நாடு தொடர்ந்தும் பின்னோக்கியே தள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும், அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, “அரச தொழில் முயற்சிகளை இலாபம் ஈட்டுகின்ற துறைகளாக மாற்றி அமைப்பதற்கென உருவாக்கப்பட்டது. எனினும், இலங்கையைப் பொருத்தவரையில் அரச தொழில் முயற்சிகளில் பல சமூக நலன்புரி ஏற்பாடுகள் சார்ந்தும் இருப்பதால், அவற்றினை இலாபம் ஈட்டுகின்ற துறைகளாக மாற்றி அமைக்கின்றபோது, இத்தகைய நலன்புரித் திட்டங்கள் யாவும் அகற்றப்பட வேண்டிய நிலை உருவாகும்.

அத்துடன், ஆளணிகளை அதிகளவில் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படாது என்பதால், இலங்கை அரச நிறுவனங்களில் மிக அதிகளவாக இருக்கின்ற ஆளணிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டிய நிலையும் உருவாகும்.

இத்தகைய நிலைமைகளை இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் விரும்பாது என்ற வகையில், இந்த ‘தொமசெக்’ மொடல் என்பது தற்போதைய நிலையில் இலங்கைக்கு சாத்தியமில்லை என்றாலும், அதனைக் கொண்டு வருவதால் உரியமுறையில் நியமனங்கள் வழங்கப்பட்டு, செயற்படுத்துவதால், அரச தொழில் முயற்சிகளை இலாபம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.

எல்லாவற்றையும் இலவசமாகவே எதிர்பார்க்கின்ற மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்த நாட்டில், அந்த மக்களை அத்தகைய நிலைக்குத் தொடர்ந்தும் தள்ளிவிடுகின்ற மாறி, மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் இருக்கும் வரையில், அந்த அரசாங்கங்களின் ஆதரவாளர்களும், சொந்த பந்தங்களை பதவிகளில் அமர்த்தினால் இந்த நாட்டில் அரச தொழில் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.