சொந்த நாட்டிலேயே நிரந்தர தீர்வின்றி தமிழ் மக்கள் – மட்டு. ஆயர்

சொந்த நாட்டிலேயே நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் இந்த தைப்பொங்கலை தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன. அதன்படி மட்டக்களப்பு புனித அந்தோனியார் திருத்தலத்திலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் பங்கு மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்ற விழாவாக அமைகின்றது.

இறைவன் தந்த நல்ல விளைச்சலுக்காக நன்றி கூறுகின்ற மனப்பான்மை தமிழர்களிடையே இருந்ததை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

எங்களுடைய நாட்டிலே எமக்கான ஒரு நிரந்தர தீர்வில்லை என்ற ஏக்கத்தோடுதான் இந்த பொங்கலை நாம் கொண்டாடுகின்றோம்.

எமக்கு ஒரு நிரந்தர தீர்வு எப்போது வரும் என நாம் ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டிலாவது நிலையான அமைதி, நிரந்தர தீர்வு புதிய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய நல்ல நாளை இறைவன் தரவேண்டும்“ என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.