சேறு பூசும் செயற்பாடே அதிகளவு இடம்பெறுவதாக ஹிருணிகா குற்றச்சாட்டு

உலகத்தில் தற்போது பிரபலமடைந்து காணப்படும் விடயமென்றால் ஒருவர் மீது சேறு பூசி அதனூடாக பிரபல்யமாவதாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகத்தில் மிகவும் கடினமான வேலை, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகும்.

இதற்காக ஏனைய தொழில்களை கடினமானது அல்லவென்று கூறவில்லை. அதாவது 24 மணித்தியாலங்களுக்கும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேலை இதுவாகும்.

காலையிலே யாருக்காவது அச்சுறுத்தல் பிரச்சினையென்று தகவல் வருமாயின், செய்யவேண்டிய அனைத்து வேலைகள் மற்றும் கடமைகளை நிறுத்திவிட்டு உடனடியாக அங்கு உடனடியாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.

அதுமட்டுமல்ல நடு இரவிலும் பிரச்சினை என்றாலும் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று அறிய வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.அதேபோன்று பெண் என்ற ரீதியில் குடும்பம் மற்றும் உறவினர்களையும் கவனிக்க வேண்டும்.

இத்தகைய விடயங்களையெல்லாம் செய்து அரசியலில் பெண்கள் பிரவேசிக்கின்றப்போது அவர்களை முடக்குவதற்கு சில ஆண்கள் மாத்திரமல்ல சில பெண்களும் இருக்கின்றனர்.

அதாவது பிரபலமாக ஒரு பெண் சமூகத்தில் இருந்தால், அவரின் ஆடை, மற்றும் உணவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விமர்சனம் செய்து சேறு பூசுவதனை அதிகளமாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.