செஞ்சோலை மாணவர் படுகொலை நினைவுத் தூபியில் ஒளிப்படங்களை பதிக்க பொலிஸார் தடை!

வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுத் தூபியில் அவர்களின் ஒளிப்படங்களை பதிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படை நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் 53 மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.

அவர்களின் 13ஆவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அவர்களை நினைவுகூறும் முகமாக வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் பாரிய நினைவு தூபியொன்று அமைக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உரிய அனுமதி பெறப்பட்டு குறித்த வீதியில் நினைவு தூபி அமைக்கப்பட்டபோதும், இந்த நினைவுத் தூபியில் மாணவர்களின் ஒளிப்படங்களை பதிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவாலயங்கள் அமைப்பதற்கு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கமும் பொலிசாரும் தடைவிதித்து வருகின்ற நிலையில, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.