சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம்- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்

கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு, சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் அவர், உண்ணாவிரத போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.

கொழும்பில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக அண்மையில் தகவலொன்று வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயத்துக்கு இலங்கையிலுள்ள சுவீஸ் தூதுவர், இலங்கைப் பிரதமர் மற்றும் வெளிவிவவகார அமைச்சை உடனடியாக சந்தித்து தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டதாகவும் உடனடியாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள ஏனைய சில கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் வெவ்வேறு விதமான தகவல்களை வெளியிட்டன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டுமென பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையிலேயே அதன் உண்மையை கண்டறிய வேண்டுமென்ற நோக்கத்திற்காக சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சுவிஸ் தூதரக ஊழியரிடமே வாக்குமூலத்தை பெறுவதே சிறந்ததென கூறி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.