சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்கு? – யோகேஸ்வரன் கேள்வி

சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வவுணதீவு பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் குற்றப்புலனாய்வு பிரிவில் சம்பளம் வாங்கியுள்ளார். எனவே தௌஹீத் ஜமாத் அமைப்பு பயங்கரவாத அமைப்பென்று ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக வடக்கில் ஆளில்லா விமானமொன்று சுற்றித்திரிகிறது. ஆனால் அது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருப்பது வழமையென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆனால் சுருவங்களே இல்லாத பள்ளிவாசல்களிகள் எதற்கு வாள்கள் வைத்திருக்க வேண்டும்? இந்து கோயில்களில் வாள்கள் வைத்திருப்பது சாதாரண விடயம். ஏனெனில், சடங்குகளுக்கு வாள்கள் பயன்படுத்தப்படும். ஆனால் பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.