சுமந்திரனின் கருத்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் அரசியல்வாதி

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் நாட்டை நேசிக்கும் இராணுவத்தினரை இழிவு படுத்தியுள்ளதாக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் வெளியிட்ட இந்தக் கருத்து, மிகக் கேவலமானது எனவும், இதன் ஊடாக தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் மீளெளுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதன்மூலம் தமக்கு விசுவாசமான ஒருவரை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இராணுவ புலனாய்வாளர்களில் ஒரு தரப்பினர் மிக மோசமான கொடூரங்களை அரங்கேற்றப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.