சுதந்திர தினத்திலாவது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு இன்று (வெள்ளிக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து நீதிக்கு புறம்பாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.

வாழ்க்கையில் பொருளின்றி, பிடிப்பின்றி, குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்ற உணர்வின்றி, நடைப்பிணங்களாக நான்கு சுவருக்குள் அடிமைகளாக எந்தவித உரிமையும் இன்றி உயிர் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை இந்த வருட சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்.

நாட்டின் நீண்டகால போராட்ட வரலாற்றில் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் மக்களின் உரிமைக்காக சகல வேறுபாடுகளையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் மன்னார் பிரஜைகள் குழு இந்த வேண்டுகோளை தமிழ் மக்கள் மற்றும் அரசியல் கைதிகள் சார்பாக அரசாங்கம், நாட்டின் தலைவர் மற்றும் நீதித்துறையினரிடம் முன்வைக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

அவர்களின் நல்வாழ்க்கைக்காக, குடும்பங்களின் ஒருங்கிணைப்புக்காக, உரிமை வாழ்வுக்காக அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்“ என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.